
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இரு அணிகளும் அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி அதிரடியாக தொடங்கினார். இதனால் இப்போட்டியில் அவர் ரன்களைக் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.