
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.
இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், நூர் அஹ்மத், சாம் காரண் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள சிஎஸ்கே அணி பேட்டர்களும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.