
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. போலண்ட் பார்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டோனோவன் ஃபெரீரா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களையும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபெரீரா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும் சேர்த்தனர். பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் பிஜோர்ன் ஃபோர்டுயின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணியில் பிரிட்டோரியஸ் 27 ரன்களிலும், ஜோ ரூட் 6 ரன்களிலும், ஹெர்மான் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தன. பின்னர் களமிறங்கிய மிட்செல் வான் பியூரன் மற்றும் கேப்டன் டேவிட் மில்லர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர். இதில் வான் பியூரன் 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.