
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது காயத்தை சந்தித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து அவருக்கு மாற்றாக மற்றொரு இடது கை தொடக்க வீரர் இமாம் உல் ஹக் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் ஃபகர் ஸமான் தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் காயத்துடன் பேட்டிங் செய்த ஃபகர் ஸமான் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு சென்ற நிலையில், வீரர்கள் ஓய்வரையில் அவர் தனது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுத காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு அழுவதை காண முடிந்தது.