
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 10 ரன்களிலும், கேன் வில்லியம்சன் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த வில் யங் - டாம் லேதம் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் சதமடித்து அசத்திய வில் யங் 107 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் பிலீப்ஸும் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் லேதம் சதமடித்து அசத்தியதுடன் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 115 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் சௌத் சகீல் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வானும் 3 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.