
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்தியா அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கர்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஜேக்கப் பெத்தெல், கஸ் அட்கின்சன், ஜோஷ் டங்க் ஆகியோருக்கு லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணியில் ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்தூல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோருக்கு பதிலாக கருண் நாயர், துருவ் ஜூரெல், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் கஸ் அட்கிசன் பந்துவீச்சில் எல்பிடள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்துள்ள ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.