
நடப்பாண்டிற்கான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்களையும், விஜய் சங்கர் 42 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து 222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய பரோடா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மிதேஷ் 18 ரன்னிலும், அஷ்வின் குமார் 29 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவலிக் சர்மா 14 ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய பானு பனியா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களையும், கேப்டன் குர்னால் பாண்டியா 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 69 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் பரோடா அணி 20 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.