151 கிமீ வேகத்தில் வந்த பதிரானாவின் யார்க்கர்; தடுமாறி கீழே விழுந்த கிளாசென் - வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் யார்க்கர் பந்தை எதிர்கொண்டு தடுமாறி கீழே விழுந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவர்களில் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 19 ரன்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையடைய தென் ஆப்பிரிக்க அணியும் தொடக்கம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
Trending
அதன்படி அந்த அணியில் ரீஸா ஹென்றிக்ஸ் 4 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 12 ரன்களிலும், குயின்டன் டி காக் 20 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்ரிச் கிளாசென் 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை இலங்கை அணியின் மதீஷா பதிரானா வீச, அதனை ஹென்ரிச் கிளாசென் எதிர்கொண்டார். அப்போது ஓவரை மூன்றாவது பந்தை பதிரானா சுமார் 151 கிமீ வேகத்தில் யார்க்கராக வீச அதனை சற்றும் எதிர்பாராத கிளாசென் பந்தை தடுக்கும் முயற்சியில் தடுமாறி கிழே விழுந்தார். இந்நிலையில் பதிரானாவின் யார்க்கர் பந்தில் கிளாசென் தடுமாறி கிழே விழுந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now