
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மீதமிருக்கும் இடத்தை தென் ஆப்பிரிக்க அணி நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர். கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் இது ஜோஸ் பட்லரின் கேப்டனாக செயல்படும் கடைசி போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பில் சால்ட் 8 ரன்னிலும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 24 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.