
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தர். அவரைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 7 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்த நிலையில், 31 ரன்களைச் சேர்த்த கையோடு ஷுப்மன் கில்லும் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.