
சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு முதலிரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட இந்த தொடரில் ஆஃப் ஸ்பின்னர் இல்லாத குறையை தீர்ப்பதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றுவரும் இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வான நிலையில் விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது ஷமி பந்துவீசினார். இதில் முதல் ஓவரின் 4வது பந்தில் அதிரடிதொடக்க வீரர் மிட்சேல் மார்ஷை தன்னுடைய ஸ்விங் பந்தால் முகமது ஷமி 4 ரன்களில் அவுட்டாக்கினார். குறிப்பாக சமீபத்திய தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் அதிரடியாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை ஷமி ஆரம்பத்திலேயே அவுட்டாக்கியது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.