
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், ரியான் பராக் 30 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய துருவ் ஜூரெல் இரண்டு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர், குர்னால், ஹேசில்வுட், தயாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் பில் சால்ட் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.