
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ரியான் பராக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.