
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்திற்கு முன்னேறியது.
இதையடுத்து இன்று நடைபெற்று வரும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. மழையால் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்திய ஷுப்மன் கில் விரைவாக ரன்களை சேர்த்தார்.
இருப்பினும் மறுபுறம் பெயருக்காக 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட சஹா 3 பவுண்டரியுடன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கைகோர்த்த கில் தொடர்ந்து மும்பை பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு முதல் ஆளாக அரை சதமடித்து வலுவான அடித்தளத்தை அமைத்தார். குறிப்பாக சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்த சதங்களை அடித்து சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த சீசனிலும் ஏற்கனவே அடுத்தடுத்த சதங்களை அடித்துள்ளார்.