
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் 3 ஆவது போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் பந்து வீச்சாளர்களே அணியின் வெற்றியை தீர்மானித்தினர். இதனால், கடைசி ஒரு நாள் போட்டியிலும் பந்து வீச்சாளர்களின் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இந்த கூட்டணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அபாரமாக பந்துவீசினார் சிராஜ். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோ டக் அவுட் ஆகிய நிலையில், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் அதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் இணை நிதானமாக விளையாடி வருகிறது.