
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சண்டிகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடி கொடுத்து அசத்தியுள்ளது.
இதுதவிர்ந்து இந்த வெற்றியின் மூலம் ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியிருப்பதுடன், புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது. மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தங்களுடைய மூன்றாவது தோல்வியைத் தழுவி 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி வீரர் சுயாஷ் சர்மா ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகியுள்ளது.
அந்தவகையில் இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை சுயாஷ் சர்மா வீசிய நிலையில், ஓவரின் இரண்டாவது பந்தில் ஜோஷ் இங்கிலிஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்னிலும், ஓவரின் 5ஆவது பந்தில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இந்நிலையில் தான் சூயாஷ் சர்மா பந்துவீச்சில் இரு ஆஸ்திரேலிய வீரர்களும் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.