
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், வில் யங் மற்றும் டேரில் மிட்செலின் அரைசதங்கள் அடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.