சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு பெற்ற வாஷிங்டன் சுந்தர் தனது முதல் போட்டியிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார்.
அதிலும் குறிப்பாக பவர்பிளேவின் கடைசி ஓவரை ஹைதராபாத் அணி தரப்பில் சிமர்ஜித் சிங் வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களை விளாசியதுடன் மொத்தமாக 20 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் குஜராத் அணி மீதான அழுத்தத்தையும் அவர் குறைத்தார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடும் காணொளி வைரலாகி வருகிறது.