
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்கு முன்னர் மைதானத்தில் அதிகளவிலான ஈரப்பதம் இருந்ததன் காரணமாக டாஸ் நிகழ்வானது ஒரு மணி நேரம் தாமதமானது. இதனையடுத்து தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படதா நிலையில், வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ஷத்மான் இஸ்லாமும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் வங்கதேச அணி 29 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸில் தனது முதல் ஓவரை ஆகஷ் தீப் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஸாகிர் ஹசன் தடுத்து ஆட முயற்சித்தார்.