
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனை குல் ஃபெரோசா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முனீபா அலி - சித்ரா அமீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் முனீபா அலி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அலியா ரியாஸ் 20 ரன்களுக்கும், ஒமைமா சோஹைல் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய சித்ரா அமீன் அரைசதம் கடந்தார்.
பின்னர் 54 ரன்களைச் சேர்த்த கையோடு சித்ரா அமீன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் ஃபாத்திமா சனா 15 ரன்களிலும், சித்ரா நவாஸ் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 191 ரன்களில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கரிஷ்மா ரம்ஹராக், ஹீலி மேத்யூஸ், அஃபி ஃபிளெட்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.