இந்த மைதானம் சவாலானது - டெம்பா பவுமா!
நாங்கள் எதிர்பார்த்தது போலவே பிட்ச் இருந்தது. ஆனால், நாங்கள் அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளவில்லை என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து என அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்திய அணி, தனது 8ஆவது போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்ரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறியதால் வெறும் 83 ரன்களுக்கே ஆல் அவுட்டான தென் ஆப்ரிக்கா அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியையும் சந்தித்தது.
Trending
இந்ந்லையில் தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, “இந்த மைதானம் சவாலானது என தெரியும். நாங்கள் சேஸிங் செய்து தோல்வி அடைந்து இருக்கிறோம். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுடன் நாங்கள் இது பற்றி முன்பே பேசி இருந்தோம். இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 10 ஓவர்களில் 90 ரன்கள் குவித்தது.
ஆனால், நாங்கள் அதன் பின் சிறப்பாக செயல்பட்டோம். ரன் ரேட்டை குறைத்தோம். ரோஹித் சர்மா அடித்தளம் அமைத்தார். கோலி - ஸ்ரேயாஸ் நல்ல கூட்டணி அமைத்தனர். நாங்கள் எதிர்பார்த்தது போலவே பிட்ச் இருந்தது. ஆனால், நாங்கள் அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட இதே மைதானத்தில் தான் நாங்கள் அரை இறுதியிலும் ஆட இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now