
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிக்ளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 86 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 44.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.