
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தாலும் இலங்கை அணியை சேர்ந்த 20 வயதான ஆல்ரவுண்டர் துனித் வெல்லாலகேவின் செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதோடு அவர் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக விளையாடிய விதம் அனைவரது மத்தியிலும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது போன்று அதிரடியாக விளையாடாமல் நிதானமாக துவங்கியது. அதன்பிறகு அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிலும் குறிப்பாக இலங்கை அணியை சேர்ந்த துனித் வெல்லாலகே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணியை கட்டி போட்டார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டன் உட்பட 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் என ஐந்து முக்கிய வீரர்களையும் வீழ்த்தினார்.