
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொடர் என்பதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. அதன்படி ஜனவரி 25ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரானது மார்ச் 11ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் போட்டிகளானது ஹைதராபாத், ராஜ்கோட், விசாகப்பட்டினம், ராஞ்சி மற்றும் தரம்சாலா மைதானங்களில் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் என நான்கு தரமான ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம்பிடித்திருப்பதால் இங்கிலாந்து அணியின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பாஸ்பால் எனும் அதிரடியான ஆட்ட அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது. இந்த அணுகுமுறையின் மூலம் அதிரடியாக விளையாடிவரும் இங்கிலாந்து அணியும் வெற்றிகளை ஈட்டியுள்ளது. இந்நிலையில் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் அணுகுமுறை உள்ளதாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.