
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட கடைசி மூன்றாவது டி20 போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் விருந்தாக அமைந்திருந்தது. இந்த போட்டியின் மூலமாக ரசிகர்கள் புதிய கிரிக்கெட் விதி ஒன்றையும் நேற்று தெரிந்து கொண்டார்கள். இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு ஆட்டம் செல்லும் பொழுது, முதல் சூப்பர் ஓவரில் ஆட்டம் இழந்த பேட்ஸ்மேன், பந்து வீசிய பந்துவீச்சாளர்கள், இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை செய்ய முடியாது என்பது விதி.
இந்த விதியை நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் நடந்து முடிந்த போட்டியில் இருந்து தெரிந்துகொண்டார்கள். ஆனால் ஒரு சுவாரசிய விஷயமாக இது இரண்டு அணிகளுக்கும் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. முதல் சூப்பர் ஓவரில் இந்தியா பேட்டிங் செய்யும்பொழுது கடைசி பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தன்னால் இரண்டு ரன்கள் வேகமாக ஓட முடியாது என்று வெளியேறி ரிங்கு சிங்கை வரவழைத்தார். இது தன்னைத்தான் அவுட் என்று அறிவித்துக் கொள்வது.
இந்த முறையில் அவர் ஆட்டம் இழந்ததாக எடுத்துக் கொண்டால், அடுத்து இரண்டாவது சூப்பர் ஓவரில் அவர் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவர் இரண்டாவது ஓவரில் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார். மேலும் ஆஃப்கானிஸ்தான் தரப்பிலிருந்து எந்தக் கேள்வியும் முன் வைக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு விதி குறித்த தெளிவு கிடையாது.