
ஐசிசி ஒருநாள் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் நடைபெறுகிறது. இதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த அணிகளில் ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று காலம் காலமாக ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் இந்தியாவை வீழ்த்தி 6ஆவது கோப்பையை தங்களுடைய நாட்டுக்கு எடுத்துச் செல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.
மறுபுறம் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தோல்விகளை மட்டுமே பார்த்து அவமானங்களை சந்தித்து வரும் இந்தியா இத்தொடரில் நியூசிலாந்து உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மட்டுமல்லாமல் கங்குலி தலைமையில் 2003இல் படுதோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு மொத்தமாக சேர்த்து இம்முறை பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.