
ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணிக்காக விளையாடிய நவீன் உல் ஹக் மற்றும் ஆர்சிபி அணிக்காக விளையாடிய விராட் கோலி இருவரும் மோதிக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் நவீன் உல் ஹக் எப்போது எந்த மைதானத்தில் விளையாடினாலும் விராட் கோலி பெயர் எதிரொலித்து கொண்டே இருந்தது.
இதனால் உலகக்கோப்பை தொடரில் நவீன் உல் ஹக் - விராட் கோலி இடையிலான யுத்தத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். டெல்லியில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போதும் நவீன் உல் ஹக் பவுலிங் செய்ய வந்த போது விராட் கோலி பெயரை கொண்டு ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது உடனடியாக விராட் கோலி, நவீன் உல் ஹக்கை கட்டியணைத்து அவருக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து நவீன் உல் ஹக் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட போது, அவரின் பெயரை கொண்டு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக விராட் கோலியின் சொந்த மண்ணான டெல்லியிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ரசிகர்கள் நவீன் உல் ஹக் பந்துவீசிய போது ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.