முடிவு எதுவாக இருந்திருந்தாலும் கூட இந்த அற்புதமான நாளை மறக்கமாட்டோம் - பாட் கம்மின்ஸ்!
இந்தத் தொடரின் சிறப்பான செயல்பாட்டை கடைசிப் போட்டியில் கொடுப்பதற்காகக் காத்திருந்தோம் போல என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி இன்றுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாய கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 66 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 43 ஓவர்களில் இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Trending
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், "இந்தத் தொடரின் சிறப்பான செயல்பாட்டை கடைசிப் போட்டியில் கொடுப்பதற்காகக் காத்திருந்தோம் போல. முக்கியமான போட்டிகளில் அணியின் முக்கியமான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். சேஸிங்கிற்கு கொஞ்சம் ஏதுவாக சூழல் இருந்தது. பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. அதற்கேற்றவாறு வீரர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள்.
நாங்கள் கொஞ்சம் வயதான அணியைத்தான் வைத்திருக்கிறோம். ஆனால், அனைவரும் தங்கள் திறனை நன்றாக வெளிக்காட்டி சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். 300 ரன்களை சேஸ் செய்ய வேண்டியிருந்தால் கொஞ்சம் கடினமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அதுவும் சேஸ் செய்யக்கூடிய டார்கெட்தான். 240 ரன்கள் என்பது எங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
டிராவிஸ் ஹெட்டும், லபுஷாக்னேவும் அழுத்தம் ஏற்றிக் கொள்ளமல் சிறப்பாக செயல்பட்டுவிட்டார்கள். ஹெட்டை அணியில் எடுத்ததே ஒரு ரிஸ்க்கான விஷயம்தான். அவர் கை உடைந்திருந்தது. ஆனாலும் தேர்வாளர்கள் அவரை நம்பி அணியில் எடுத்தார்கள். எடுத்த ரிஸ்க்கிற்கான பலனை அனுபவிக்கிறோம். ஹெட் ஒரு லெஜண்ட். எங்களின் பௌலிங்கின் போது பெரும்பாலும் இந்திய ரசிகர்களை அமைதியாக வைத்திருந்தோம்.
ஒரு சில இடங்களில் அவர்கள் ஆர்ப்பரித்தபோது அது பயங்கரமான ஆர்ப்பரிப்பாக இருந்தது. கிரிக்கெட்டின் மீதான இந்த ரசிகர்களின் ஆர்வம் அற்புதமானது. முடிவு எதுவாக இருந்திருந்தாலும் கூட இந்த அற்புதமான நாளை மறக்கமாட்டோம். நாம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். அதற்காக காத்திருக்க முடியாது. தைரியமாக துணிச்சலாக ஆட்டத்தில் மோதிப் பார்க்கலாம். முதல் இரண்டு போட்டிகளில் தோற்றபோது அணியினரிடம் இதைத்தான் சொன்னேன். இந்த ஆண்டு எங்களுக்கு ஏகப்பட்ட வெற்றிகள் கிடைத்திருக்கின்றன. இந்த ஆண்டை எங்களால் மறக்கவே முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now