
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட கையோடு இத்தொடரை எதிர்கொள்கிறது.
இதன் காரணமாக இத்தொடரின் மூலம் இரு அணிகளும் மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் படுதோல்வியின் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெற முயற்சி செய்வோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளார்.