T20 WC 2024: புதிய மைல் கல்லை எட்டிய ரோஸ்டன் சேஸ்; விவரம் இதோ!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அரைசதம் மற்றும் 3+ விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் நான்காவது சர்வதேச வீரர் எனும் சாதனையை ரோஸ்டன் சேஸ் படைத்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிகெக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இரண்டாவது அணியாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற விரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 52 ரன்களையும், கைல் மேயர்ஸ் 35 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்ஸி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது முதல் இரண்டு ஓவர்கள் முடிவிலேயே ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மழை பெய்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்பாடி தென் ஆப்பிரிக்க அணிக்கு 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Trending
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் 18 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 22 ரன்களையும் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கோ ஜான்சென் 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறியது. இதன்மூலம் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணி வீரர் ரோஸ்டன் சேஸ் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் பேட்டிங்கில் அரைசதமும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அரைசதம் மற்றும் 3+ விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் நான்காவது சர்வதேச வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ 2009ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 66 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக்கோப்பையில் 50 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
- 66* & 4/38 - டுவைன் பிராவோ vs இந்தியா, 2009
- 51 & 3/26 - ஷேன் வாட்சன் vs அயர்லாந்து, 2012
- 72 & 3/34 - ஷேன் வாட்சன் vs இந்தியா, 2012
- 67* & 3/19 - மார்கஸ் ஸ்டோய்னிஸ் vs ஓமன், 2024
- 52 & 3/12 - ரோஸ்டன் சேஸ் vs தென் ஆப்பிரிக்கா, 2024*
Win Big, Make Your Cricket Tales Now