
வெஸ்ட் இண்டீஸ்-வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்கவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியனது முதல் இன்னிங்ஸில் 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 64 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 146 ரன்னிகளில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேசி கார்டி 40 ரன்களைச் சேர்த்தார். வங்கதேச தரப்பில் நஹித் ரானா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 18 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் ஜக்கார் அலி 91 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் அந்த அணி 268 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 287 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் தைஜில் இஸ்லாம் பந்துவீச்சில் 185 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.