
இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும் அபாரமாக விளையாடிய அந்த அணி 3 – 2 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது.
அந்த வகையில் 2022 டி20 உலகக் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்தை தெறிக்க விட்ட வெஸ்ட் இண்டீஸ் அடுத்த வருடம் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இருக்கிறோம் என்பதை உலக அணிகளுக்கு காண்பித்தது. முன்னதாக இத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரஸல் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட தேர்வாகி முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது என்று கம்பேக் கொடுத்தார்.
இந்நிலையில் அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக உடலளவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ரஸல் தெரிவித்துள்ளார். குறிப்பாக காட்டுத்தனமாக சிக்சர்களை அடிக்க உடலை மெருகேற்றி வருவதாக தெரிவிக்கும் அவர் அடுத்த வருடம் தாம் பார்ப்பதற்கு ஃபைட்டர் போல இருப்பேன் என்று அதிரடியாக பேசியுள்ளார்.