
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. அதன்படி அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது ஜூன் 12அம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதில் இங்கிலாந்து டி20 அணியானது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் வெஸ்ட் இண்டீஸின் டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் புதிய கேப்டனாக ஷாய் ஹோப் நியமிக்கபட்டதை அடுத்து அந்த அணி எதிர்கொள்ள முதல் தொடர் இதுவாகும். மேலும் நட்சத்திர ஆல் ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.