
வெஸ்ட் இண்டீஸ் அணி இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களுடைய கடைசி டெஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆபார வெற்றியைப் பெற்ற கையோடு இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது இந்திய அணிக்கு எதிரான படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், சொந்த மண்ணில் இந்த டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளதால் அந்த அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன.
மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 33.33 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக 17.50 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்வதால், நிச்சயம் இத்தொடரில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.