
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி புள்ளி பட்டியலிலுல் முதலிடம் பிடித்துள்ளது.
இருப்பினும் 2023 உலக கோப்பைக்கு வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி மிகவும் பலவீனமான அணியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்குவதில் என்ன வீரம் என்று இந்த வெற்றியைப் பற்றி இந்திய ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக 171 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வாலை பாராட்டும் ரசிகர்கள் சதமடித்து 103 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை அப்படியே நேர் மாறாக கிண்டலடித்து வருகிறார்கள்.
ஏனெனில் உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார் என்பதற்காக கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்று தரவரிசையில் இந்தியாவின் நம்பர் ஒன் அணியாக முன்னேற்றினார்.