ஒரு டெஸ்டில் வெற்றி பெற எல்லாம் சரியாக நடக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
நீங்கள் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெற வேண்டுமென்றால், எல்லா விஷயங்களும் களத்தில் சரியாக நடக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. அதிலும் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது 212 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையடிய இந்திய அணி 477 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 110 ரன்களையும், ரோஹித் சர்மா 103 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது 195 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும், தொடர் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தேர்வு செய்யப்பட்டார்.
Trending
வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா, “நீங்கள் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெற வேண்டுமென்றால், எல்லா விஷயங்களும் களத்தில் சரியாக நடக்க வேண்டும். இப்போட்டியில் நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்துள்ளோம். இந்திய அணியில் யாரும் நிரந்திரமாக விளையாட போவதில்லை. வீரர்கள் வருவதும், போவதும் சாதாரணம் தான். இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு சர்வதேச அளவில் அனுபவம் குறைவு என்றாலும், அவர்கள் அதிகளவிலான போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளனர்.
நாம் அவர்களுக்கான வாய்ப்பை கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டிற்கான அனுபவத்தை புரியவைக்க வேண்டும். அதன்படி இத்தொடரின் அழுத்தம் நிறைந்த சூழல்களில் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றிக்கான புகழும், பெருமையும் ஒட்டுமொத்த இந்திய அணியே சேரும். ஏனெனில் நாம் ரன்கள் குவிப்பதை பற்றி பேசுகிறோம். ஆனால் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். அதற்கேற்றது போல் இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர்.
குல்தீப் யாதவிற்கு நிறைய திறமைகள் உள்ளன. அவரால் ஒரு மேச்ட் வின்னர் ஆக முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதிலும் அவர் தனது காயத்திற்கு பிறகு மீண்டு வந்ததுடன், பந்துவீச்சில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல் குல்தீப் யாதவின் பேட்டிங்கை பார்க்கவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இத்தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அவர் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அவருக்கு இரு மிகச்சிறந்த தொடராக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now