
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 உலகக்கோப்பையில் அறிமுகத் தொடரிலேயே 523 ரன்கள் குவித்து மாபெரும் உலக சாதனை படைத்த நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தராவை முதல் வீரராக 1.80 கோடிக்கு வாங்கியது.
அதை தொடர்ந்து 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளிலும் சதமடித்து அபாரமாக செயல்பட்ட மற்றொரு நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்சேலை 14 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கிய சென்னை அணி, இந்தியாவைச் சேர்ந்த ஷர்தூள் தாக்கூரையும்வாங்கியது. இந்த நிலைமையில் சமீர் ரிஸ்வி எனும் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரை 8.40 கோடி என்ற பெரிய தொகைக்கு சென்னை வாங்கியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
ஏனெனில் வெறும் 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதுவரை சர்வதேச அரங்கில் விளையாடாத போதிலும் சென்னை இவ்வளவு தொகைக்கு வாங்கியது ஏன் என்று ரசிகர்கள் வியப்படைந்தனர். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் 2022 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 18 சிக்ஸர்களை அடித்து தம்முடைய திறமையை வெளிப்படுத்தினார்.