
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிர்க் மெக்கன்ஸி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதற்கிடையில் இவர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தவறவிட்டனர்.