
டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் 171 ரன்களும், பவுலிங்கில் அஸ்வின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 12 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளனர்.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா, “டிக்ளேர் செய்வதற்கு முன்னால் களத்தில் இருந்த ஜடேஜா மற்றும் இஷான் கிஷான் இடம் ஒரு ஓவர் மட்டுமே இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டிருந்தேன். இஷான் கிஷான் தனது முதல் ரன்னை அடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதற்குப் பின்னால்தான் டிக்ளர் செய்ய முடியும். எனவே இதை நான் அவரிடம் சொன்னேன்.
இஷான் கிஷான் பேட்டிங் செய்ய மிகவும் ஆர்வமாக இருந்து வந்தார். இதை நான் எப்பொழுதும் பார்த்து வருகிறேன். இந்த நிலையில் நான் டிக்ளர் செய்தது அவரை வெறுப்படைய வைத்திருக்கும். நாட்டுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு ரன்களும் மிக முக்கியமானவை. நாங்கள் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டோம் என்று சொல்லி இந்த பேச்சை நான் ஆரம்பிக்க விரும்புகிறேன். அவர்களை 150 ரன்கள் சுருட்டியது போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தது.