
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனல் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா இறுதிக்கு தகுதி பெறுவதற்கு தயாராகி வருகிறது.
அதற்கு முன்பாக கத்துக்குட்டியான நெதர்லாந்துக்கு எதிராக நவம்பர் 12ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெறும் சம்பிரதாய கடைசி லீக் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. ஏனெனில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் போன்ற அணிகளை தோற்கடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றாலும் எஞ்சிய போட்டிகளில் தோல்விகளை பதிவு செய்த நெதர்லாந்து லீக் சுற்றுடன் ஏற்கனவே வெளியேறி விட்டது.
அதனால் சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணியாக திகழும் இந்தியா கண்டிப்பாக நெதர்லாந்தை தோற்கடித்து ரசிகர்களுக்கு தீபாவளி பரிசளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்ததாக நாக் அவுட் போட்டி நடைபெற உள்ளதால் நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக நடைபெறும் இப்போட்டியில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.