
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இவர் இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில் அவர் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன.
மேல்சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் ரிஷப் பந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.