
வங்கதேச மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச மகளிர் அணிக்கு ஃபர்கானா ஹக் - முர்ஷிதா கதும் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபர்கானா 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் முர்ஷிதாவுடன் இணைந்த ஷமின் அக்தர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 40 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முர்ஷிதா கதும் 40 ரன்களிலும், ஷமின் அக்தர் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த ஷோபனா மொஸ்ட்ரி 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகாளில் ஷொர்னா அக்தர் 29 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைச் சேர்தது. விண்டீஸ் தரப்பில் டியாண்டிரா டோட்டின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.