
இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நெபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ஓய்வளிக்கப்பட்டதன் காரணமாக ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்தினார். மேற்கொண்டு சஜீவன் சஞ்சனா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கத்திற்கு மாறாக ஷஃபாலி வர்மா - தயாலன் ஹேமலதா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 122 ரன்களைக் குவித்த நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தயாளன் ஹேமலதா 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் சதத்தை நெருங்கிய ஷஃபாலி வர்மாவும் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஜீவன் சஞ்சனாவும் 10 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனல் இந்திய அணியும் 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.