
இலங்கையில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை மற்றும் மலேசிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மற்றொரு தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் சமாரி அத்தப்பத்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஹர்ஷிதா மாதவி 26 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அனுஷ்கா சஞ்சீவனி 31 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சமாரி அத்தபத்து தனது சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
அதுமட்டுமின்றி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சமாரி அத்தபத்து 14 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 119 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் இலங்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தது. மலேசியா அணி தரப்பில் கேப்டன் வினிஃபெர்ட் துரைசிங்கம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய மலேசிய அணியானது ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.