
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் இலங்கையில் தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் குல் ஃபெரோசா - முனீபா அலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் குல் ஃபெரோசா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களை எடுத்த நிலையில் முனீபா அலியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ஆலியா ரியாஸ் 6 ரன்களிலும், கேப்டன் நிதா தார் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சித்ரா அமீன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் அட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து இணைந்த டுபா ஹசன் - ஃபாத்திமா சனா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டுபா ஹசன் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாதிமா சனா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீராங்கனைகள் யாரும் போதிய ரன்களைச் சேர்க்க தவறியதால் அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.