
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கியானா ஜோசப் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஹீலி மேத்யூஸ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் ஸ்டெஃபானி டெய்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய டியாண்ட்ரா டோட்டின் 13 ரன்களுக்கும், காம்பெல் 17 ரன்களுக்கும், ஹென்றி ரன்கள் ஏதுமின்றியும், ஆலியா 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டேஃபானி டெய்லர் 44 ரன்களைச் சேர்த்தார்.