
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும், சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியும் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 27ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அவருடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களைச் சேர்த்த நிலையில் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தர். இதனால் இந்திய மகளிர் அணி 98 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.