
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. இந்த தோல்வியின் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைகக்ப்பட்டாலும், பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா தனது ஆதிக்கத்தை செலுத்தி அசத்தியுள்ளார். குறிப்பாக இத்தொடரில் பும்ரா விளையாடிய 5 போட்டிகளிலும் சேர்த்து 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், தொடர்நாயகன் விருதையும் வென்றார். அதிலும் குறிப்பாக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் பும்ரா முதுகு வலியால் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
அதனால் கடைசி இன்னிங்ஸில் பும்ராவால் பந்துவீச முடியவில்லை. ரோஹித் சர்மா தலைமையில் அனைத்து போட்டிகளும் தோல்வியுற்ற இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த தொடரிலேயே ரோஹித் சர்மா இல்லாத சமயங்களில் ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக செயல்பட்டதுடன், கேப்டனாக பெர்த் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியையும் பதிவுசெய்துள்ளார்.