
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்பட்ட நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியாமல் லீக் சுற்றுடனே தொடரை விட்டு வெளியேறியுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்ட பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தற்சமயம் லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த அணி அமெரிக்காவிற்கு எதிரான தங்களுடைய முதல் லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்ததே இந்நிலைக்கு காரணமாக கருதப்படுகிறது. இதனால் அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இன்று அது ஒரு படி மேல் சென்று தன்னை விமர்சித்த ரசிகரை வீரர் ஒருவர் தாக்கும் அளவிற்கு சென்றுள்ளது.