
நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை வெல்லும் லட்சியத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் பொறுப்புடன் செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
அதில் ரோஹித் சர்மாவை விட சற்று அழுத்தமான 3ஆவது இடத்தில் விளையாடும் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 2/3 என்று இந்தியா சரிந்த போது மிகச் சிறப்பாக விளையாடி 85 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதே போல நியூசிலாந்துக்கு எதிராகவும் அழுத்தமான சமயத்தில் 95 ரன்கள் எடுத்த எடுத்த அவர் 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய வீரராக செயல்பட்டார்.
இருப்பினும் அந்த போட்டியில் 5 ரன்னில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (49) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை விராட் கோலி தவற விட்டது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும் விரைவில் 35 வயதை மட்டுமே தொடும் அவர் இன்னும் 2 – 4 வருடங்கள் விளையாடுவார் என்பதால் சச்சினை மிஞ்சி மொத்தமாக 120 சதங்கள் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே சொல்லலாம்.